5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு காலம் தொடங்கியதே தமிழகத்தில் தான்; மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் தமிழர்கள் பெருமிதம்

சென்னை, ஜனவரி-24, தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பு காலம் தொடங்கியதாக, புதிய அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கோள் காட்டி தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலப்பரப்பில் தான் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, உலகிலேயே இரும்புத் தாதுவில் இருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் அங்கு தான் தொடங்கியுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.
அமெரிக்கா, ஃபுளோரிடாவில் உள்ள ஆய்வகமே அதனை உறுதிபடுத்தியுள்ளது.
இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை என்றார் அவர்.
இந்தியாவின் வரலாறே இனி தமிழ் நிலத்திலிருந்து தான் எழுதப்பட வேண்டுமென அவர் பெருமையுடன் கூறினார்.
இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அண்மைய அகழ்வுப் பணிகளில் அது 5,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், இரும்பின் தொன்மை என்ற ஆய்வு நூலை வெளியிட்டு பேசிய போது ஸ்டாலின் அவ்விவரங்களைக் கூறினார்.
அவ்வறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பயனர்களாலும் தலைவர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் தொல்லியல் கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவின் செழுமையான வரலாறு உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளதாக வருணித்த, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் அவர்களில் அடங்குவார்.
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பொதுவாக கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என பிரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.