
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்டு 18 – DAP கட்சிக்கு வாக்களிக்க ஏதுவாக, சுமார் 54 ஆயிரம் சீன நாட்டவர்களுக்கு, குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை, JPN – தேசியப் பதிவுத் துறை மறுத்துள்ளது.
2017-ஆம் ஆண்டுக்கும் 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மொத்தம் 54 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக, கடந்த ஜனவரியில் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் வெளியிட்ட அறிக்கை தவறாக திரித்து கூறப்பட்டுள்ளதாக, தேசியப் பதிவுத் துறை தெளிப்படுத்தியது.
அந்த 54 ஆயிரம் விண்ணப்பங்கள், பல்வேறு பின்னணிகள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்டவை.
அதே சமயம், 2019-ஆம் ஆண்டுக்கும், இவ்வாண்டு ஜூலை 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், சீனாவை சேர்ந்த 45 பேருக்கு மட்டுமே மலேசிய குடியுரிமை வழங்கப்பட்டதையும் தேசிய பதிவுத் துறை சுட்டிக்காட்டியது.
அதனால், சீன நாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதாக, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள அவதூறுகளை நிராகரித்த தேசியப் பதிவுத் துறை, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோளை பூர்த்திச் செய்பவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.