ஜோகூர், ஆகஸ்ட் 28 – இவ்வாண்டு மெர்டேகா தினத்தை முன்னிட்டு ஜோகூர், மெகா ஜீனியஸ் (Mega Genius) பாலர் பள்ளியில், தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தேறின.
நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில், பாலர் பள்ளியின் தலைமையாசிரியர் மோகனம்பாள் தலைமையில், 560 மோட்டார் சைக்கிள் சக்கரங்களைக் கொண்டு தேசியக் கொடியை உருவாக்கி, மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது இப்பள்ளி.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி, 100 மாணவர்களுடன் 10 ஆசிரியர்கள் மற்றும் 150 பெற்றோர்களும் இணைந்து 21.93 மீட்டர் நீலம் கொண்ட இந்த கொடியைத் தயாரித்ததாக, அதன் தலைமையாசிரியர் மோகனம்பாள் கூறினர்.
ஒவ்வொரு முறையும், தேசிய தினக் கொண்டாட்டத்தில் புது விதமாக தேசியக் கொடியை உருவாக்குவதை இப்பள்ளி வழக்கமாகக் கொண்டுள்ளது.
2019ஆம் ஆண்டு அரிசியில் கோலமிட்டும், 2022ஆம் ஆண்டு 2300 தேங்காய் ஓடுகளைக் கொண்டும், 2023ஆம் ஆண்டு 2128 முட்டை அட்டைகளைப் பயன்படுத்தியும் இப்பள்ளி தேசியக் கொடியை உருவாக்கியது.
இதில் 2023ஆம் ஆண்டில் 76 அடி நீளம் உருவாக்கிய தேசியக் கொடி, முதன் முதலில் மலேசியச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதையும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும், மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை வேரூன்ற வைக்கும் வகையில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுடன், தேசியத் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இப்பள்ளியில். அதே சமயத்தில் இப்படி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது பெற்றோர், மாணவர்கள் மற்றும் பள்ளிக்கிடையே நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதாக கூறுகிறார் மோகனம்பாள்.