கோலாலம்பூர், பிப் 28 – தமிழ் – சீனப் பள்ளிக் கூடத்தைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்கள், இனி நேரடியாக முதலாம் படிவத்திற்கு செல்ல, கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியிருக்கும் மலாய் மொழி தேர்வுக்கான புதிய மதிப்பீட்டு முறை, சில தரப்பினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நேரடியாக முதலாம் ஆண்டுக்குச் செல்ல, மலாய் மொழித் தேர்வில் தமிழ்- சீனப் பள்ளிக்கூட மாணவர்கள் 4-லிருந்து 6-ஆம் வரையிலான தேர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.
1-லிருந்து 3-ஆம் வரையிலான குறைந்த தேர்ச்சியைப் பெற்ற மாணவர்கள், புதிதாக UPLBM எனப்படும் மலாய்மொழி ஆளுமைத் தேர்வுக்கு அமர்த்தப்படுவார்கள்.
இந்த கூடுதல் தேர்வை நடத்தி மாணவர்களை ஏன் மேலும் சிரமப்படுத்த வேண்டும் ? மேலும் அத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், சம்பந்தப்பட்ட அந்த ஆறாம் ஆண்டு மாணவர்களின் நிலை தான் என்னவாகுமென சிலருக்கு குழப்பமும் கேள்வியும் எழுந்திருக்கிறது.
இந்நிலையில், அந்த UPLBM தேர்வு, தமிழ்- சீன பள்ளிக்கூட மாணவர்கள், முதலாம் படிவதற்குள் நுழைய வழங்கப்பட்டிருக்கும் இரண்டாம் வாய்ப்பாகுமெனக் கூறியுள்ளார் பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான அமைப்பாளர் சற்குணன் சுப்ரமணியம்.
UPSR தேர்வு அகற்றப்பட்ட பின்னர் மாணவர்களின் இடைநிலைப் பள்ளிக்கான நுழைவு, வகுப்பு சார் மதிப்பீட்டைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது.
அதன் அடிப்படையில், வகுப்பு சார் மதிப்பீட்டில் மலாய் மொழியில் நல்ல தேர்ச்சிப் பெறும் மாணவர்கள் நேரடியாக முதலாம் படிவத்திற்கு தகுதி பெறுவர்.
அவ்வாறு தவறும் மாணவர்கள், UPLBM தேர்வுக்கு அமர்வர். அத்தேர்வில் நல்ல அடைவுநிலையைப் பதிவு செய்யும் மாணவர்கள் முதலாம் படிவத்திற்கு செல்ல இரண்டாம் வாய்ப்பை பெறுவர்.
இந்நிலையில் அந்த தேர்விலும் தேர்ச்சிப் பெறாவிட்டால் மாணவர்கள் கல்வியில் பின்தங்கி விடுவார்களா என்ற கவலை வேண்டாம். ஏனெனில், அவர்கள் மலாய் மொழியில் மேலும் தங்களது ஆளுமையை அதிகரித்துக் கொள்வதற்காக புகுமுக வகுப்புக்கு செல்வார்கள் என சற்குணன் சுப்ரமணியம் தெளிவுப்படுத்தினார்.