பூச்சோங், மே 9 – பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா நேற்று மிகவும் விமரிசையாக நடந்தேறியது.
சுமார் 6.1 ஏக்கர் நிலத்தில், மூன்று கோடி ரிங்கிட்டில் கட்டப்படும் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளி, 18 மாதங்களில் பூர்த்தி அடையும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
கடந்த 2014இல் அப்பள்ளியின் புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது பல காரணங்களுக்காகவும் நிதி பற்றாக்குறையினாலும் தொக்கி நின்றது.
ஆனால், இன்று அரசாங்கத்தினாலும் தனியார் நிறுவனத்தின் வழியும் கிடைத்த உதவியால் சாத்தியமாகியுள்ளது என பள்ளியின் வாரியத் தலைவர் குமார் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு வகையளித்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பள்ளியின் கட்டுமனத்திற்கு தனது முழு ஆதரவும் இருக்குமென்று உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில், ஒரு பள்ளிக்கான விழாவாக இருந்தாலும், இது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் உள்ள ஒற்றுமையின் பலனை வெளிப்படுத்துகிறது என்றார்.
10 ஆண்டுகாலச் சிக்கலை நமது ஒற்றுமையின் வழியே இன்று களைய முடிந்தது; அதற்கு இந்த விழவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, தற்போது பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலப்பரப்பில், 4 மாடி கட்டிடத்தில் 156 வகுப்பறைகளுடன் அப்பள்ளி பிரமாண்டமாக அமைந்து காட்சியளிக்கவுள்ளது.
பத்தாண்டு கால போராட்டத்திற்கு பிறகு, அனைவரின் ஒத்துழைப்பின் வெற்றிக்குச் சான்றாக, அப்பள்ளியின் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார் பள்ளியின் தலைமையாசிரியர் கற்பகம் கிருஷ்ணசாமி.
துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ, இலக்கவியல் துறை அமைச்சரும் பூச்சோங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் உட்பட பலர் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.