சுபாங் ஜெயா, நவம்பர்-30, சிலாங்கூர், சுபாங் ஜெயா, SS16 பகுதியில் விலையுயர்ந்த பொருட்களை விற்கும் கடையிலிருந்து, அண்மையில் ரோலேக்ஸ் கை கடிகாரத்தைக் களவாடிச் சென்ற ஆடவன் நேற்று போலீசில் பிடிபட்டான்.
44 வயது அந்த உள்ளூர் ஆடவன் கோலாலம்பூரிலுள்ள பேரங்காடியில் நேற்று மாலை கைதானதை, சுபாங் ஜெயா போலீஸ் உறுதிப்படுத்தியது.
தலைநகரில் விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கும் ஒரு கடையில் 25,000 ரிங்கிட்டுக்கு அந்த கை கடிகாரத்தை அந்நபர் விற்றிருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரின் உதவியுடன் அக்கடைக்குச் சென்று அந்த கை கடிகாரத்தை போலீஸ் பறிமுதல் செய்தது.
மேல் விசாரணைக்கு அவ்வாடவனைத் தடுத்து வைக்க ஏதுவாக இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவிருக்கிறது.
நவம்பர் 23-ஆம் தேதி காலை கடைத் திறப்பதற்கே முன்பே வெளியில் காத்திருந்த அந்நபர், பின்னர் வாடிக்கையாளர் போல் கடைக்குள் நுழைந்து 64,000 ரிங்கிட் மதிப்புள்ள ரோலேக்ஸ் கை கடிகாரத்துடன் கம்பி நீட்டினான்.
திருடுபோனது, Rolex Datejust 36 Oystersteel ரகத்தைச் சேர்ந்த கை கடிகாரமாகும்.