கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – இந்தியாவின் 78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவில் உள்ள இந்தியா ஹவுசில் (India House) இன்று ஆகஸ்டு 15 ஆம் தேதி காலை 8 மணிக்குக் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி இந்தியாவின் கொடியை அதிகாரப்பூர்வமாக ஏற்றி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை வாசித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
ஏறக்குறைய மலேசியாவில் 60 ஆயிரம் இந்தியர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு இந்தியப் பெண்களின் வணிக கடைகள் உட்பட Partition Horrors Remembrance Day குறித்தும் இங்குக் கண்காட்சி வைக்கப்பட்டிருப்பதாக இந்தியத் துணை தூதர் சுபாஷினி நாராயணன் தெரிவித்தார்.
இதனிடையே கலாச்சாரம் மற்றும் பரம்பாரியத்தையும் தாண்டி, மலேசியாவிற்கும் இந்தியாவிற்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் இதர அம்சங்களையும் ஆராயும் வகையில் அமையவுள்ள அன்வாரின் பயணத்திற்குக் ஆவலோடு காத்திருப்பதாக அவர் கூறினார்.
ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட பிரமுகர்களும் இந்தியப் பிரஜைகளும் கலந்துக்கொண்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.