
இசைஞானி இளையராஜா இன்று தமது 80 வயது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு, இளையராஜாவை, அவரது வீட்டில் நேரடியாக சென்று சந்தித்து, வாழ்த்து கூறி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள, இளையராஜாவின் வீட்டிற்கு ஸ்டாலின் நேரடியாக செல்லும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
1943-ஆம் ஆண்டில் பிறந்த இளையராஜா, 1976-ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கினார். குறிப்பாக, ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் வாயிலாக, தமிழ் திரையுலகில் கால்பதித்த அவர், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து, அசைக்க முடியாத இசை சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார்.
1970-களில் தமிழ் திரையுலகை தனது இசையால் கட்டி புரட்டி போட்டவர் இளையராஜா.
இதுவரை அவர் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சிம்பொனி இசைக்குழுவினர் இளையராஜாவுக்கு ‘மேஸ்ட்ரோ’ என்ற பட்டத்தை வழங்கிய வேளை ; முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவருக்கு ‘இசைஞானி’ என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
சமீபத்தில் அவர் இசையமைத்த படங்களில் கூட பல ‘ஹிட்’ பாடல்களை தந்து, இசையுலகின் முடிசூடா மன்னராக வலம் வருகிறார் இளையராஜா.
இன்று தமது 80 வயது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு, திரையுலகத்தினரும், நண்பர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, “திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களை கடந்து நிலைத்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏக சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.