கோலாலம்பூர், பிப் 19 – (MySTEP) எனப்படும் மலேசியாவின் குறுகிய கால வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 80,000 வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக நிதி அமைச்சு 170 கோடி ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. http://www.mystep.mof.gov.my/ என்ற அகப்பக்கத்தின் மூலம் வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் தெரிவித்தார். நிதியமைச்சு மற்றும் மனித வள அமைச்சின் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புக்கள், அல்லது MyFutureJobs; MySTEP மற்றும் UpSkillMalaysia Portals போன்ற அகப்பக்கம் மூலம் விண்ணப்பம் செய்யும்படி அவர் கேட்டுககொண்டார்.
இன்று மலேசியக் குடும்பத்தின் வேலை வாய்ப்பு உத்தரவாத முன்முயற்சி 2022 நிகழ்வை தொடக்கி வைத்து பேசியபோது தெங்கு ஷப்ருல் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் மனித வள அமைச்சின் கீழ் உள்ள சொக்சோ உட்பட பல்வேறு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வேலை உத்தரவாத முயற்சியின் கீழ் MySTEP நடவடிக்கை மூலம் பொதுத் துறையிலும் அரசாங்கம் சார்புடைய ஜி.எல்.சி நிறுவனங்களில் குறுகிய மற்றும் குத்ததை முறையிலான வேலை வாய்ப்பு திட்டத்தை வழங்குகிறது, கடந்த 2021ஆம் ஆண்டில் 63,221 பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தது.
பட்டதாரிகளுக்கு 50,000 வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் இலக்கை விட இது அதிகமாகும். வேலை உத்தரவாத முயற்சியின் கீழ் வேலை உத்தரவாத கோட்பாட்டை நிறைவேற்றும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது, கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் மிஞ்சி 560,000 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன. இந்த முயற்சி இந்த ஆண்டு மேலும் தொடரும் என தெங்கு ஷப்ருல் தெரிவித்தார்.