கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – 5 நாட்கள் 96 மணி நேரங்கள் இடைவிடாது முடி வெட்டி சாதனை படைக்கவுள்ள 21 இந்திய இளைஞர்களுக்கு ஆதரவளிக்கத் திரண்டு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் ம.இ.கா-வின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன்.
இன்று தொடங்கி, ஆகஸ்டு 26ஆம் திகதி வரை, இந்த 21 இளைஞர்களும் இணைந்து 2,000 பேருக்கு இடைவிடாது அமுடி வெட்டி, மலேசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் மாபெரும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர்.
ஒரு காலகட்டத்தில் முடி வெட்டுவது, சலவை செய்வது உட்படப் பல தொழில்கள் இந்தியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
ஆனால், கால ஓட்டத்தில் நவீன வசதிகளுடன் மற்ற சமூகத்தினதும் இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்; பொருளாதார அடிப்படையில் முன்னேற இது போன்ற தொழில் திறன் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
அதற்கு வழிவகுத்துள்ள Dass Skill அகாடமிக்கு வாழ்த்துகளை உரித்தாக்கினார், சரவணன்.
மஇகா பத்து தொகுதி இளைஞர் மற்றும் புத்ரா அணியும், பத்து மலையில் இயங்கி வரும் Dass Skill அகாடமியின் கூட்டுமுயற்சியிலும், இச்சாந்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த 21 இளைஞர்களும் Dass Skill அகாடமியில் பயிற்சி பெற்று, சிங்கப்பூர் வரை பல இடங்களில் வேலை செய்து வரும் கைதேர்ந்த மாணவர்கள் என்கிறார் அவர்களின் பயிற்றுநர் ஈஸ்வர்.
இப்பயிற்சி மையம் ஏற்கனவே இரண்டு மலேசியா சாதனைகளை முறியடித்துள்ளது. இது மூன்றாவது முறையாக, இளைஞர்களுக்கு ஓர் அங்கிகாரம் வழங்க நடத்தப்படுகிறது என்கிறார்கள் அதன் நிர்வாக இயக்குநர்களான காளிதாஸ் மற்றும் மாலதி.
முடிவெட்டும் திறனை மட்டும் வெளிக்கொணர இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை; இந்த சாதனையில் வெட்டப்படும் முடிகள் சேகரிக்கப்பட்டும் மலேசியப் புற்றுநோய் சங்கத்திற்கு வழங்கப்படும் உன்னத நோக்கமும் உள்ளடங்கியுள்ளதை ம.இ.கா இளைஞர் மற்றும் புத்ரா பிரிவு தலைவர்கள் தெரிவித்தனர்.
தங்களின் முடிவெட்டும் திறனை வெளிக்கொணரும் இத்தளத்தில் மக்களின் ஆதரவை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதாக அந்த 21 இளைஞர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
எங்களின் திறமையைக் காண, உடனே வந்து முடி திருத்திக் கொள்ளுங்கள் என பொதுமக்களையும் கேட்டு கொள்கின்றார்கள் இவர்கள்.
இன்று தொடங்கிய இந்த சாதனை முயற்சியு முடிவெட்டிக் கொண்ட சிலர் வணக்கம் மலேசியாவிடம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மலேசியாவிலேயே இதுபோன்ற ஐந்து நாட்கள் இடைவிடாது முடிவெட்டும் துறையில் சாதனை படைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இவர்களின் உன்னத முயற்சியில் நீங்களும் பங்கெடுக்க இன்றே, கோலாலம்பூரில் அமைத்துள்ள ம.இ.கா நேதாஜி அரங்கிற்கு வந்து முடி திருத்திக் கொள்ளுங்கள்!