
பேங்காக் , ஜன 11 – AFF கிண்ண காற்பந்து போட்டியில் இறுதியாட்டத்திற்கு தகுதி பெறும் மலேசிய காற்பந்து குழுவின் கனவு சிதைந்தது. பேங்காக்கில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது கட்ட அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதன் வழி தாய்லாந்து 3-1 என்ற கோல் வேறுபாட்டில் இறுதியாட்டத்திற்கு தேர்வானது. கடந்த வாரம் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தபோதிலும் நேற்றைய ஆட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட எளிதாக தாய்லாந்து குழுவினர் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் அடுத்த திங்கட்கிழமை இரண்டு கட்டங்களாக நடைபெறும் இறுதியாட்டத்தில் வியட்னாம் அணியுடன் தாய்லாந்து மோதும். Hanoi My Dinh விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற மற்றொரு இரண்டாது கட்ட அரையிறுதியாட்டத்தில் வியட்னாம் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது.