சான் பிரான்சிஸ்கோ, மே 10 – AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ உள்ளடக்கங்கள், தானியங்கி முறையில் லேபிள் அல்லது அடையாளப்படுத்தப்படுமென டிக் டொக் கூறியுள்ளது.
OpenAI தளத்தின் Dall-E செயலி உட்பட தனது நிறுவனத்தின் சொந்த கருவிகள் மற்றும் ஜெனரேட்டர்கள் வாயிலாக உருவாக்கப்படும் வீடியோ உள்ளடக்கங்களுக்கும் அது பொருந்துமென டிக் டொக் தெரிவித்துள்ளது.
AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூகத்தை சீர்குலைக்கும் “டீப் பேக்” வீடியோக்களின் பெருக்கம் பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
AI செயற்கை நுண்ணறிவை கொண்டு உருவாக்கப்படும் உள்ளடக்கம் நம்பமுடியாத புத்தாக்க தன்மையை கொண்டுள்ளது. எனினும், பார்வையாளர்களுக்கு அதன் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியமானது என டிக் டொக்கின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவுத் தலைவர் ஆடம் பிரஸ்ஸர் கூறியுள்ளார்,
அதனை கருத்தில் கொண்டே, செயற்கை நுண்ணறிவை கொண்டு உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உள்ளடக்கத்தின் தானியங்கி லேபிளிங் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், அது சமூக ஊடக தளங்களில் முதல் முறையாக இணைக்கப்பட்டிருக்கும் புதிய அம்சம் எனவும் ஆடம் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், சீன நிறுவனமான பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக் டொக், AI மூலம் எடிட் செய்யப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை தானியங்கி முறையில் அடையாளம் காணும் முறையை விரைவில் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.