கங்ஙார், ஏப்ரல் 9 – “All In” என்ற ஹோட்டலின் பெயர் அரபு எழுத்துக்களில் “Allah” என்ற வார்த்தையைப் ஒத்திருப்பதாகக் கூறி தமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட விஷயத்தால்,
பெர்லிஸ் முஃப்தி டத்தோ முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் ‘டென்ஷன்’ ஆகியுள்ளார்.
இது போன்ற தேவையற்ற பிரச்னைகளை உருவாக்காதீர்கள் என அவர் கடிந்துக் கொண்டார்.
அந்த ஹோட்டலுக்குச் சொந்தக்காரர் முஸ்லீம் அல்லாதவர் என்பதால், தேவையற்ற அதிருப்தியில் இது போல் செய்யாதீர்கள் என பொது மக்களை அவர் நினைவுறுத்தினார்.
இப்படி ஒரு புரளியைக் கிளப்பி, ஹோட்டல் உரிமையாளரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளீர்கள்; All In என்ற பெயர் ஹோட்டலில் பல பொருட்களில் அச்சடிக்கப்படுவதால் அவரும் இப்போதே கதி கலங்கிப் போயிருப்பதாக டத்தோ அஸ்ரி சொன்னார்.
தமது கண்களுக்கு All In என்ற சொல் Allah என்ற சொல்லுடன் ஒத்திருக்கவில்லை; அவர்களும் அப்படி எழுதவில்லை; புகார்தாரரின் கண்களுக்கு மட்டும் தான் அது அப்படி தெரிவதாக அஸ்ரி காட்டத்துடன் சொன்னார்.
நம் கண் முன்னே எழுதப்பட்டுள்ளதை தான் நாம் பார்க்க வேண்டும்; மாறாக, சிந்தனையில் ஓடிக் கொண்டிருப்பதை வைத்து வியாக்கியானம் செய்வது கூடாது என்றார் அவர்.
உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்தும் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; ஆனால் அதற்காக இதுபோன்ற ஒன்றும் இல்லாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி அதில் குளிர்காய்வதும் சரியல்ல என முஃப்தி கூறினார்.
Allah என்ன வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், Allah என்ற வார்த்தையை ஒத்திருக்கும் வகையில் பெண்கள் அணியும் high heels காலணியொன்றின் முத்திரை இருப்பதாக நாட்டில் புதியப் பிரச்னைக் கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.