கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – Ambang Merdeka எனப்படும் தேசிய தின வரவேற்புக் கொண்டாட்டங்களை ஒட்டி, வரும் வெள்ளிக்கிழமை இரவு தலைநகரில் 4 முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
டத்தாரான் மெர்டேக்கா, புக்கிட் பிந்தாங், TRX, KLCC ஆகியவையே அந்நான்கு இடங்களாகுமென, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா தெரிவித்தார்.
மெர்டேக்கா வரவேற்புக் கொண்டாட்டங்களுக்காக அந்நான்கு இடங்களிலும் மக்கள் அதிகளவில் கூடுவர் என்பதால், மொத்தமாக 1,656 போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபடுவர்.
அவர்களில் 116 போக்குவரத்து போலீசார், சாலைப் போக்குவரத்தைக் கண்காணிப்பர் என்பதோடு, சட்டவிரோத மோட்டர் பந்தயம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான சோதனையையும் மேற்கொள்வர்.
Ambang Merdeka கொண்டாட்டத்தை பொது மக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவதை உறுதிச் செய்வதே அதன் நோக்கமென, டத்தோ ருஸ்டி தெரிவித்தார்.
இவ்வேளையில், சனிக்கிழமை தேசிய தின அணிவகுப்பைக் காண டத்தாரான் புத்ராஜெயாவுக்குச் செல்லும் பொது மக்கள், அனுமதிக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்துவது உட்பட சாலை விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
முடிந்தவரை பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.