Ballon d’Or வெற்றியாளராக மென் சிட்டியின் ரோட்ரி தேர்வு; விழாவைப் புறக்கணித்த ரியால் மெட்ரிட்
பாரீஸ், அக்டோபர்-29, ஐரோப்பாவின் மிகச் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பிரசித்திப் பெற்ற Ballon d’Or விருதை, மென்செஸ்டர் சிட்டியின் மத்தியத் திடல் ஆட்டக்காரர் ரோட்ரி (Rodri) வாகை சூடியுள்ளார்.
பாரீசில் நடைபெற்ற விருதளிப்பில் ரியால் மெட்ரிட் அணியின் ‘மூவேந்தர்களான’ Vinicius Junior, Dani Carvajal, Jude Bellingham ஆகியோரை ரோட்ரி தோற்கடித்தார்.
இதன் வழி 2008-ஆம் ஆண்டில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு Ballon d’Or விருதை வென்றுள்ள முதல் இங்லீஷ் பிரிமியர் லீக் ஆட்டக்காரராக ரோட்ரி பெயர் பதித்துள்ளார்.
மென்செஸ்டர் சிட்டியுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இங்லீஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றது, ஸ்பெயின் தேசிய அணியின் மூலம் EURO 2024 கிண்ணத்தை வென்றது என இந்த 2023-2024 பருவம் ரோட்ரிக்கு மிகச் சிறப்பானதோர் ஆண்டாக அமைந்துள்ளது.
இவ்வேளையில், Ballon d’Or விருது தங்களுக்கே என பெரும் நம்பிக்கையிலிருந்த ரியால் மெட்ரிட் அணி, இந்ந விருதளிப்பு விழாவையே புறக்கணித்துள்ளது.
ரோட்ரி தான் வெல்லப் போகிறார் என தகவல் நேற்று முதலே கசியத் தொடங்கியதால், பாரீஸ் செல்லாமல் ரியால் மெட்ரிட் விழாவைப் புறக்கணித்தது.
என்றாலும், ஆண்டின் சிறந்த ஆடவர் அணியாக ரியால் மெட்ரிட்டும், சிறந்த பயிற்றுநராக அதன் நிர்வாகி கார்லோ அன்ச்சலோட்டியும் (Carlo Ancelotti) அறிவிக்கப்பட்டனர்.