
ஜோகூர் பாரு, ஜனவரி-18 – கணிசமான இலாபம் கொட்டுமென்ற ஆசை வார்த்தைகளை நம்பி, Bitcoin முதலீட்டு மோசடியில் சிக்கி 460,000 ரிங்கிட்டுக்கும் மேல் பறிகொடுத்து நிற்கிறார் 61 வயது மூதாட்டி.
ஜோகூர் பாருவைச் சேர்ந்த அந்தக் கணக்காய்வாளர், facebook விளம்பரத்தைப் பார்த்து ‘PFOU’ என்ற முதலீட்டுத் திட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் இணைந்துள்ளார்.
கொடுக்கப்பட்ட link இணைப்பைத் தட்டி டெலிகிராம் குழுவில் சேர்ந்தவருக்கு, ‘அம்முதலீடு’ குறித்து பலர் விளக்கம் தந்து நம்பிக்கையூட்டினர்.
பணி ஓய்வை நெருங்குவதால், முதலீட்டில் இறங்கலாமென முடிவெடுத்து கடந்த டிசம்பரில் UVKXE என்ற செயலியை அவர் பதிவிறக்கம் செய்தார்.
டிசம்பர் 30 முதல் ஜனவரி 16 வரை இரு வேறு வங்கிக் கணக்குகளில் மூன்று தடவையாக மொத்தம் 460,888 ரிங்கிட்டை அவர் போட்டுள்ளார்.
முதலீட்டுக்கு 5.5 மில்லியன் ரிங்கிட் இலாபம் கிடைத்திருப்பதாக அந்த UVKXE செயலியும் காட்டியது.
எனினும் இலாபத்தை மீட்க முயன்ற போது, நிர்வாகக் கட்டணமாக 550,152 ரிங்கிட்டை செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டதால் அம்மூதாட்டி அதிர்ச்சியடைந்தார்.
தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை அப்போது தான் அவர் உணர்ந்தார்.
இதையடுத்தே ஸ்ரீ ஆலாம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.