கோலாலம்பூர், ஜூன் 28 – பேங்க் ராக்யாட் ஏற்பாட்டில் இந்திய தொழில் முனைவர்களுக்காக வழங்கப்படும் BRIEF -i கடனுதவி திட்டம் குறித்து அரசியல் லாபத்திற்காக குறை கூற வேண்டாம் என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
இந்திய தொழில் முனைவர்கள் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக பேங்க் ராய்யாட் மூலமாக BRIEF கடனுதவி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து சுயநலத்திற்காக சிலர் குறைகூறுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் அவர் வலியுறுத்தினார்.
குறைகூற வேண்டும் என்பதற்காக இந்திய சமூகத்திற்கு நன்மை தரக்கூடிய முயற்சிகளை சீர்குலைக்க வேண்டாம் என பொறுப்பற்ற சில தரப்பினரை ரமணன் கேட்டுக்கொண்டார். வர்த்தகத் துறையில் வெற்றி பெறுவதற்காக இந்திய தொழில் முனைவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அரசாங்கம் மற்றும் நிதி நிறுவனங்களின் ஆதரவோடும் சில நல்ல நடவடிககைகைளை முன்னெடுத்து வருகிறோம். டிக் டோக் மூலம் இதனை சீர்குலைத்துவிட வேண்டாம் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் வலியுறுத்தினார்.