
22 ஆண்டுகள் அம்னோவில் அதிகாரத்தில் இருந்தபோது, DAP மீது அம்னோ உறுப்பினர்கள் வெறுப்புக் கொள்ளும் கொள்கையை துன் மஹாதீர் ஆழமாக விதைத்து விட்டதாக, அஹ்மட் சாயிட் ஹமிடி குற்றம்சாட்டினார். DAP இடம்பெற்றிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்துடன் தேசிய முன்னணி ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளது குறித்து அதிருப்தி நிலவுவதாக கூறப்படுவது தொடர்பில் சாயிட் அவ்வாறு கருத்துரைத்தார்.
DAP-யை முதல் முறையாக மஹாதீர் தான் பாக்காதான் ஹரப்பான் அரசாங்கத்தில் இணைத்தார். அதனால் அவரைத் தான் குறைக்கூற வேண்டுமென சாயிட் குறிப்பிட்டார். DAP குறித்து எதிர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்திய மஹாதீரே பின்னர் அதனை மறந்து விட்டு அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தார். பெர்சத்து, பாஸ் ஆகிய கட்சிகள் அரசியல் ரீதியாக DAP-யை அரவணைத்து சென்றுள்ளன. எனினும், அம்னோவும், தேசிய முன்னணியும் மட்டுமே இதுவரை கட்சி கொள்கைகளில் இருந்து மாறாமல் செயல்பட்டு வருவதையும் சாயிட் சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், 30 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற போதிலும், ஆறு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது குறித்தும் சாயிட் நன்றி தெரிவித்தார்.