கோலாலம்பூர், ஆகஸ்ட் -29 – கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) ஏற்பாட்டில் நாளையிரவு மெர்டேக்கா சதுக்கத்தில் (Dataran Merdeka) நடைபெறவிருந்த 2024 மெர்டேக்கா வரவேற்புக் கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தனது முகநூல் பக்கத்தில் DBKL அதனை உறுதிப்படுத்தியது.
தலைநகரில் அண்மையில் அடுத்தடுத்து நிகழ்ந்த சில அசம்பாவிதங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டாலும், முழு தேசப் பற்றோடு சுதந்திரத்தின் பொருளை உணர்வோம் என DBKL வலியுறுத்தியது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வில் சிக்கி இந்திய நாட்டு பிரஜையான 48 வயது விஜயலட்சுமி காணாமல் போனார்.
சாதாரணமாக நடந்துச் சென்றவர், 8 மீட்டர் ஆழத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினுள் விழுந்து காணாமல் போனார்.
இரவு பகலாக தேடல் மீட்புப் பணிகள் மீற்கொண்டும் அவர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அச்சம்பவத்திற்குப் பிறகு, நேற்று முன்தினம் அவ்விடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சிறிய அளவில் மீண்டும் நிலம் உள்வாங்கியது.
அதே போல், கம்போங் கெரிஞ்சி, ஜாலான் பந்தாய் பெர்மாயிலும் சில தினங்களுக்கு முன் கால்வாய் நிலப்பகுதியில் திடீர் பள்ளமேற்பட்டது.
எனினும் அவ்விரு சம்பவங்களிலும் எவரும் காயமடையவில்லை.