அலோர் ஸ்டார், நவம்பர்-27 – ஏழை மக்களுக்காக கெடா அரசாங்கத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Desa Sejahtera அல்லது வளமான கிராம வீடமைப்புத் திட்டம், எதிர்காலத்தில் அனைத்து இன மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி மொஹமட் நோர் (Datuk Seri Sanusi Md Nor) அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
மற்ற இனங்களிலும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை அரசு அறியும்; எனவே வரும் காலங்களில் சயாமியர்கள், சீனர்கள், இந்தியர்கள் உள்ளிட்டோருக்கும் அத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
இதுவொரு முன்னோடி திட்டம் என்பதால், தற்போதைக்கு மாநிலத்தின் பெரும்பான்மை மக்களான மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக சனுசி சொன்னார்.
வீடு கட்ட நிலமோ அல்லது எந்தவொரு சொத்தோ கொண்டிராத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2,589 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத மாத வருமானத்தைக் கொண்ட ஏழை மற்றும் பரம ஏழை குடும்பங்களும், 4,764 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத மாத வருமானத்தைக் கொண்ட B40 குடும்பங்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதிப் பெறுகின்றன.
இத்திட்டம் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என சனுசி நம்பிக்கைத் தெரிவித்தார்.