கோத்தா கினாபாலு, ஏப்ரல் 8 – அம்னோ இளைஞரணித் தலைவர் Dr Muhammad Akmal Salleh சபாவுக்குள் நுழையத் தற்போதைக்குத் தடையேதும் இல்லை.
அம்மாநில முதல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ Hajiji Noor அவ்வாறு கூறியிருக்கிறார்.
பல்லின சபா மக்களுக்கும் அவர்களின் ஒற்றுமைக்கும் Akmal தற்போதைக்கு ஓர் அச்சுறுத்தலாக இல்லை.
ஒருவேளை அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டால் அப்போது அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
இன-மத உணர்ச்சிகளைத் தூண்டி, பல்லின சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கி வருவதாகக் கூறி Akmal மற்றும் இதர நால்வரை சபா-சரவாக் மாநிலங்களுக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டது குறித்து Hajiji கருத்துரைத்தார்.
அரசியல் ஆர்வலர்களே விடுத்த அக்கோரிக்கைக்கு, முன்னாள் வெளியுறவு அமைச்சர் Tan Sri Anifah Aman உள்ளிட்ட சபா அரசியல்வாதிகள் ஆதரவுத் தெரிவித்திருந்தனர்.
Dr Akmal, வெள்ளிக்கிழமை கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிளந்தானில் அவராற்றிய சொற்பொழிவு காணொலி தொடர்பில் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அவர் விசாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட மதத்தைப் புண்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய காலுறை விற்பனை விவகாரம் வெடித்ததில் இருந்து, KK Mart கடைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறார் Dr Akmal.