DuitNow QR பரிவர்த்தனைக்கான கட்டணம்; நவம்பர் முதலாம் தேதி தொடங்குகிறது

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 28 – DuitNow QR இயங்குதளத்தின் “ஆப்பரேட்டர்” அல்லது இயக்குனரான PayNet, நவம்பர் முதலாம் தேதி தொடங்கி, அந்த செயலியை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், அந்த கட்டணம் ஒன்றும் புதிதல்ல எனவும், அதனால் சாதரண வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் PayNet கூறியுள்ளது.
2019-ஆம் ஆண்டு, அந்த செயலி அறிமுகம் கண்ட போது, அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், கட்டண விலக்கு அளிக்கப்பட்டதை PayNet சுட்டிக்காட்டியது.
அந்த கட்டணம் அமலுக்கு வந்தவுடன், அதனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை பாதிக்கப்படாது என PayNet நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்சமயம், Debit, Credit பணம்பட்டுவாடா அட்டைகள் பயன்பாட்டிற்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் வேளை; DuitNow QR முறை பயன்பாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த முறை வாயிலாக, வங்கிகளுக்கு இடையிலான பணமாற்று நடவடிக்கைகளையும், வங்கிகள் இல்லாத தரப்பினருக்கான பணமாற்று நடவடிக்கைகளையும் பயனர்கள் எளிதாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.