கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – ஊழியர் சேமநிதி வாரியத்திடம் (EPF) சந்தா பாக்கி வைத்திருக்கும் 635 நிறுவனங்களது இயக்குநர்களின் பெயர்கள், மேல் நடவடிக்கைக்காக குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நிலுவையில் உள்ள சந்தா பாக்கியைச் செலுத்தாத வரை அவர்கள் நாட்டை விட்டு வெளியேறாதிருக்க, இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் அவர்களின் பெயர்கள் ஒப்படைக்கப்பட்டன.
EPF சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு முதலாளிமார்கள் சந்தா பங்களிப்புச் செய்வது கட்டாயமாகும்.
அப்படி செய்யத் தவறினால், அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும்.
பல முறை நினைவுறுத்தியும் எச்சரித்தும் பார்த்து விட்டோம்; அப்படியும் அவர்கள் சட்டத்தை மதிக்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வழியில்லை.
தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க, அந்த எல்லைக்கும் போவோம் என, EPF தலைமை செயலதிகாரி சசாலீனா சைனுடின் (Sazalina Zainuddin) தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் மட்டுமே 13,820 அல்லது மொத்த முதலாளிகளின் 2.02 விழுக்காட்டினர் தங்களது தொழிலாளர்களுக்கான EPF சந்தாவைச் செலுத்தவில்லை.
முதலாளிமார்கள் சந்தா பாக்கியைச் செலுத்தும் வரை அமுலாக்க நடவடிக்கைகளும் கண்காணிப்பும் தொடரும் என அவர் உறுதியாகச் சொன்னார்.