
கொலம்பியாவின் அனைத்துலக தாக்குதல் ஆட்டக்காரர், ராடமெல் பல்காவோ (Radamel Falcao) தற்சமயம் ஜொகூரில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், அவர் மலேசிய லீக்கில் (Liga M) விளையாடுவார் என்ற ஊகம் வலுத்து வருகிறது.
Falcao-வின் வருகை குறித்து, JDT அணியின் உரிமையாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தனது இன்ஸ்டாகிராம் சமூக அகப்பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அந்த 37 வயது ஆட்டக்காரர், ஹரிமாவ் செலாடான் ஜெர்சியை விரைவில் அணிவார் எனவும் கோடிகாட்டியுள்ளார்.
Falcao கையெழுத்திட்ட கொலம்பியா அணி ஜெர்சியை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் புகைப்படம் ஒன்றை, ஜொகூர் பட்டத்து இளவரசர் துன்கு இஸ்மாயிலும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
உலக தரம் வாய்ந்த தாக்குதல் ஆட்டக்காரர்களில் ஒருவராக Falcao திகழ்கிறார்.
லா லீகா கிளப்பான ராயோ வாலெகானோவுக்கும், Falcao-வுக்கும் இடையிலான ஒப்பந்தம் இம்மாத இறுதியில் முடிவுக்கு வருகிறது.
அதனால், Falcao-யை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில், துன்கு இஸ்மாயில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, அண்மையில் ஸ்பெயின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதோடு, JDT அணியில் இணைந்தால், 2025-ஆம் ஆண்டு வரை Falcao-வுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ள அவ்வணி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.