கோலாலம்பூர், பிப் 22 – உணவகத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், FWCMS அகப்பக்கத்தின் வாயிலாக இணையம் வழி வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்த விண்ணப்பம் செய்யும்படி, பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த சில தினங்களாக அந்த இணைய முறையிலான விண்ணப்பத்தில் இடையூறு ஏற்பட்டிருந்தது. எனினும், தொடர்ந்து அந்த அகப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்வதில் பிரச்சனையிருந்தால் உணவக உரிமையாளர்களுக்குன் வழிகாட்ட தமது தரப்பு தயாராக உள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஜே. சுரேஷ் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 15 -ஆம் தேதி திறக்கப்பட்ட FWCMS முறையின் கீழ், அந்நிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்த இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக, நேற்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் கூறியிருந்தார்.
தயாரிப்பு, தோட்டத் தொழில், சேவை, கட்டுமானம், விவசாயம் ஆகிய துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்த அரசாங்கம் அனுமதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.