Latestமலேசியா

‘செலேண்டாங்’ விவாதம் ; ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்கிறார் ஹன்னா யோஹ்

கோலாலம்பூர், மார்ச் 8 – ஆஸ்திரேலியாவுக்கான பிரதமரின் அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது, “செலேண்டாங்” அணிந்ததற்காக கேள்வி எழுப்பப்பட்டுள்ளதை அடுத்து, மலேசியாவில் ஒற்றுமையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டுமென, இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு முன், மெல்போர்னிலுள்ள, அல்-தக்வா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக ஹன்னா விளக்கமளித்துள்ளார்.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் செலேண்டாங் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அதன் பின்னர், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே மோனாஷ் பல்கலைக்கழக பிரதிநிதிகள் வந்து விட்டதால், அணிந்திருந்த செலேண்டாங்கை அகற்ற தமக்கு போதுமான அவகாசம் இல்லை. அதனால், தொடர்ந்து செலேண்டாங்கை அணிந்தவாறு அடுத்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள நேர்ந்ததையும் ஹன்னா தெளிவுப்படுத்தினார்.

அது தனது தனிப்பட்ட முடிவு எனவும், ஒரு பெண்ணாக தலைமுடி அலங்கோலமாக இருக்கும் நிலையில் ஊடக புகைப்படங்களுக்கு காட்சியளிக்க தமக்கு விருப்பமில்லை எனவும், தயவு செய்து தமது அந்த முடிவுக்கு மதிப்பளிக்குமாறும் ஹன்னா, தனது முகநூல் பதிவு வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனால், சில நிகழ்ச்சிகளில் மட்டும் தாம் செலேண்டாங் அணிவதாக கூறப்படும் விவகாரம் இனி சர்ச்சையை ஏற்படுத்தாது என தாம் நம்புவதாகவும் ஹன்னா கூறியுள்ளார்.

2021-ஆம் ஆண்டு, மசூதிக்கு செலேண்டாங் அணிந்து சென்றதால், சக கட்சி உறுப்பினரால் ஹன்னா விமர்சிக்கப்பட்டார். மலாயக்காரர்களை கவரும் முயற்சி அதுவென கூறப்பட்டது.

எனினும், ஒரு கிறிஸ்துவரான தமது நம்பிக்கை, மசூதியில் செலேண்டாங் அணிவதால் ஒருபோதும் மாறாது என ஹன்னா பதிலளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!