ஜொகூர் பாரு, ஏப்ரல் 6 – ஜொகூர் பாருவில் Call Centre மையமாக செயல்பட்டு வந்த வர்த்தகத் தளத்தில் போலீஸ் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், இல்லாத ஒரு முதலீட்டுத் திட்ட மோசடியில் ஈடுபட்டு வந்த 40 பேர் கொண்ட உள்ளூர் கும்பல் கைதாகியுள்ளது.
22 முதல் 50 வயது வரையிலான அவர்களில் 25 பேர் பெண்களாவர் என ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் M.குமார் கூறினார்.
Xtrade என்ற பெயரில் Facebook, Instagram, You Tube போன்ற சமூக ஊடகங்களில் முதலீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்தி, ‘ஏமாளிகளைச்’ சிக்க வைப்பதே அக்கும்பலின் வேலையாகும்.
இல்லாத அத்திட்டத்தில் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலரை முதலீடு செய்ய வேண்டும்; அப்படி செய்யப்படும் முதலீட்டுத் தொகையில் இருந்து 50-100 விழுக்காடு வரையில் இலாபம் பார்க்கலாம் என சகட்டுமேனிக்கு அக்கும்பல் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகிறது.
அதிகாரத் தரப்புக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பதிவுப் பெற்ற உள்ளூர் நிறுவனமொன்றின் பெயருக்குப் பின்னால் ஒளிந்துக் கொண்டு அச்சட்டவிரோத நடவடிக்கையில் அக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது.
அம்மோசடி கும்பல் பெரும்பாலும் குறி வைப்பது வெளிநாட்டுக்காரர்களைத் தான் என கமிஷ்னர் குமார் கூறினார்.
அக்கும்பலிடம் இருந்து மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 41 செட் கணினிகள், 46 கைப்பேசிகள், ஒரு Modem உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த xtrade முதலீட்டு மோசடிக்கு ஆளானவர்கள் அது குறித்து போலீசில் புகார் செய்யுமாறும் குமார் கேட்டுக் கொண்டார்.