கோலாலம்பூர், அக்டோபர் -14, ETS எனப்படும் மின்சார இரயிலில் பயணிப்போர், அது சேவையிலிருக்கும் போது இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது.
சனிக்கிழமை ETS இரயில் சேவையிலிருந்த போது பயணி ஒருவர் வேண்டுமென்றே அதன் அவசர பிரேக்கைப் பிடித்து இழுத்த சம்பவத்தை அடுத்து, KTMB நிறுவனம் அந்த நினைவூட்டலை விடுத்தது.
அப்பயணியின் பொறுப்பற்றச் செயலால் KL Sentral-லிலிருந்து ஈப்போ பயணமான அந்த ETS இரயில் 120 நிமிட தாமதத்தை எதிர்கொண்டது.
இரவு 11.25 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவம் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
அச்சம்பவத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய KTMB, விதிமீறியப் பயணி மீது 2010 தரைப் பொது போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்றது.
இரயிலில் ஆபத்து அவசர நேரங்களில் பயன்படுத்தும் பொருட்டு பொருத்தப்பட்டுள்ள கருவிகளைத் தவறாகப் பயன்படுத்தினால் அதிகபட்சமாக ஆயிரம் ரிங்கிட் அபராதமும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.