கோத்தா பாரு, ஏப்ரல் 24 – ஏப்ரல் 14-ங்காம் தேதி KLIA டெர்மினல் 1 விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆடவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
லோக்கப் உடையுடன் கடும் போலீஸ் பாதுகாப்புடன் கிளந்தான், கோத்தா பாரு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட 38 வயது Hafizul Hawari மீது, சுடும் ஆயுதங்களை வைத்திருந்தது உட்பட மொத்தமாக 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேலதிகத் தண்டனைக் கிடைக்க வகைச் செய்யும் 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் 8-வது பிரிவு, 1957-ஆம் ஆண்டு வெடிப்பொருட்கள் சட்டத்தின் 8-வது பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் அந்நபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும், அனைத்துக் குற்றசாட்டுகளையும் மறுத்து அவர் விசாரணைக் கோரினார்.
இவ்வேளையில், இன்று சிலாங்கூர் செப்பாங்கில் உள்ள நீதிமன்றத்திலும் அவர் மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருக்கின்றன.
சம்பவத்தன்று அதிகாலை KLIA-வில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி ஒருவருக்குக் காயம் விளைவித்து விட்டு தப்பியோடிய Hafizul, சில தினங்கள் கழித்து கோத்தா பாருவில் கைதானது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவிக்கு அவர் வைத்த குறி தப்பி, மனைவியின் மெய்க்காவலர் மீது பட்டு அவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.