
புத்ராஜெயா, செப்டம்பர் 8 – 2023 தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு திறக்கப்பட்ட M_M சிறப்பு வாகன பதிவு எண் ஏலம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆகஸ்ட்டு 31-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் நான்காம் தேதி வரையில் திறக்கப்பட்டிருந்த அந்த ஏல நடவடிக்கை வாயிலாக மொத்தம், இரண்டு கோடியே 91 ஆயிரத்து 970 ரிங்கிட் வருமானம் ஈட்டப்பட்டதாக, JPJ – சாலை போக்குவரத்து துறை ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
அதில் குறிப்பாக, M1M வாகன பதிவு எண் மிக அதிக தொகையில், ஆறு லட்சத்து 22 ஆயிரம் ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்டுள்ளது.
M5M எண் ஐந்து லட்சம் ரிங்கிட்டுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதன் வாயிலாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
M8M எண் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும், M9M எண் நான்கு லட்சத்து இரண்டாயிரத்து நான்கு ரிங்கிட்டுக்கும், M6M எண் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டது.
மலேசியா மெர்டேக்கா என்பதை குறிக்கும் M_M தொடர் வாகன பதிவு எண்கள் வித்தியாசமான வரவேற்றைப் பெற்றன. மொத்தம் 25 ஆயிரத்து 33 பேர் அந்த எண்களுக்கான ஏலத்தில் பங்கேற்ற வேளை ; அதில் ஆறாயிரத்து 872 பேர் வெற்றி பெற்றனர்.
M101M, M155M, M51M, M313M, M39M ஆகிய எண்கள் அதிகமானோரின் தேர்வாக அமைந்திருந்தன.