
கோலாலம்பூர் , பிப் 22 – ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து 20 கோடி ரிங்கிட் வரை ஏமாற்றி பணம் பறித்த, அனைத்துலக முதலீட்டு மோசடி கும்பலின் நடவடிக்கையை, MACC -மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முறியடித்தது.
OP Tropicana எனும் பெயரில் ரகசியமாக , போலீசாரை உட்படுத்தாமல் , கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு ஆகிய பகுதிகளில் 24 தளங்களில் ஒரு சேர , MACC அந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
2019 -ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வரும் அந்த கும்பல், பிடிபடாமல் இருக்க, அதிகாரத்துவ தரப்புக்கு கையூட்டு வழங்கி வந்ததாக, MACC தெரிவித்தது.
அந்த அனைத்துலக மோசடி கும்பல், வெளிநாடுகளில் இருந்து ஏமாற்றி பெற்ற பணத்தை, பொய் வங்கி கணக்குகளில் போட்டு வைப்பதற்காக 24 நிறுவனங்களை திறந்துள்ளது.
அந்த பொய் கணக்குகளில் சேர்க்கப்படும் பணம் , பின்னர் அதிகாரத்துவ தரப்பினர் கண்டுபிடிக்க முடியாத வங்கி கணக்குகளில் சேர்க்கப்பட்டு விடுமென MACC கூறியது.
நேற்றைய அதிரடி சோதனை நடவடிக்கையில் , ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென் கொரியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.