
கோலாலாம்பூர், டிசம்பர்-2 – தனது முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஸ்ரீ Shamsul Iskandar Akin உட்பட யார் மீதான MACC விசாரணையிலும் தாம் குறுக்கிட்டதில்லை என, பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் விசாரணைகளை, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முழு அதிகாரத்திற்கே தாம் விட்டு விடுவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“Shamsul விஷயத்தையே எடுத்துக் கொண்டால், அவர் தடுத்து வைக்கப்பட்டு விட்டார்; அதை விட முக்கியமாக கைவிலங்கிடப்பட்டு ‘ஆரஞ்சு உடையில்’ அழைத்துச் செல்லப்பட்டார். இதுவே எனது தலையீடு இல்லை என்பதற்கான ஆதாரம்” என இன்று மக்களவையில் பேசிய போது அவர் சொன்னார்.
“திருப்தியில்லையா? உங்களுக்கு வேறு என்னதான் வேண்டும்?” என பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சியினரை பார்த்து அன்வார் விரக்தியோடு கேட்டார்.
ஊழல் புகார் எழுந்ததும் Shamsul பதவி விலகியதே மடானி அரசாங்கத்தின் நெறிமுறைக்கு சான்று என அன்வார் முன்னதாகக் கூறியிருந்ததை சுட்டிக் காட்டி, மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் Mas Ermieyati Samsudin பிரதமரிடம் கேள்விக் கேட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Albert Tei லஞ்சம் வழங்கிய விவாகரம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, Shamsul வியாழக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



