புத்ராஜெயா, மே 2 – நாட்டில் உள்ள இந்திய சமூகத்தை Madani அரசாங்கம் ஒரு போதும் ஓரங்கட்டியதில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் எப்போதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என அவர் கூறினார். பூமிபுத்ராவுக்கு உதவுவது அரசாங்கத்தின் அணுகுமுறையாக இருந்தாலும் அது மற்ற சமூகத்தை ஓரங்கட்டுகிறது எனும் அர்த்தமல்ல. எனவே பூமிபுத்ரா நிகழ்ச்சிகளைப் பற்றி யாரும் கோபமோ பொறாமையோ கொள்ள வேண்டாம் என்று இந்திய சமூகத்தை தாம் எப்போதும் வலியுறுத்துவதாக அன்வார் தெரிவித்தார்.
என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள். தகுதியானவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லையா? மலேசியாவில் 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள் குடியுரிமை பெறவில்லையா? நாங்கள் அதனை தீர்த்துள்ளோம். உள்துறை அமைச்சு அதிக அளவில் குடியுரிமை விவகாரத்தை தீர்த்திருப்பதை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறையென நேற்றிரவு நான்கு உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்களுடன் Soal Jawap Perdana Menteri என்ற நிகழ்ச்சியில் சுமார் ஒரு மணி நேரம் பேசியபோது அன்வார் தெரிவித்தார்.
இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உதவிகளில், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும், Tekun எனப்படும் தேசிய தொழில் முனைவோர் குழுமத்தின் குழுவின் பொருளாதார நிதியின் கீழ் மற்றொரு 30 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டது என்றும் அன்வார் கூறினார். இந்திய பெண் தொழில் முனைவர்களுக்கு உதவுவதற்காக Amanah Ikthiar Malaysia மூலம் 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மித்ரா மூலம் கல்வி திட்டங்களுக்கும், திறன் பயிற்சிக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் B40 இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஈடுகட்ட நிதி உதவி, விவசாயம், மைக்ரோ மற்றும் சுய தொழில் பொருளாதாரம் உள்ளிட்ட இந்திய தொழில்முனைவோருக்கான தொழில் மேம்பாட்டு திட்டங்களுக்கும் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். Petronas இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் மற்றும் 1000 இந்தியர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கு கல்வியமைச்சு கட்டிட பராமரிப்பு நிதி வழங்குகிறது.
இந்தியர்களுக்கு உதவவில்லை என சொல்பவர்கள் பணக்காரர்களாக இருப்பவர்களும் தங்கள் கட்சியின் மீது அதிருப்தி கொண்டவர்களும்தான். அவர்கள் அரசாங்கத்தை வெறுக்கும்படியாக மக்களை தூண்டிவருகின்றனர் என்றார் அன்வார். அவர்களின் பேச்சை கேட்க கேப்டன் எனவும் மக்களை கேட்டுக் கொண்டார்.