கோலாலம்பூர், பிப் 24 – கோவிட் -19 நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் செர்டாங்கிலுள்ள MAEPS – விவசாய கண்காட்சித் தளத்தில், கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளதை அடுத்து, MAEPS மையத்தில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென நம்பப்படுகிறது.
அதையடுத்து, அதிகமான கட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு வருவதை, காஜாங் நகராண்மைக் கழகம் அதன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே அந்த பதிவின் கீழ், MAEPS கோவிட் சிகிச்சை மையம் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால், இவ்வாண்டு ஹரி ராயா பெருநாளைக் கொண்டாட முடியுமா என பலரும் கேட்டிருப்பதைக் காண முடிந்துள்ளது.
சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல், பெருநாள் புத்தாடைகளை அலமாரியிலே பூட்டி வைத்து விட்டு, அதிகரித்திருக்கும் கோவிட் தொற்று குறித்து புலம்ப வேண்டியதுதான் என சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.