கோலாலம்பூர், ஜூன்-28, இரு மங்கோலியப் பெண்களுடன் அவர்களின் விருப்பம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொண்ட முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர், மொத்தமாக 8 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புகார்தாரர்களின் சாட்சியங்களையும் வாதங்களையும் குற்றம்சாட்டப்பட்ட நபர் மறுக்கவோ எதிர்க்கவோ இல்லை என்பதால் நீதிபதி அத்தீர்ப்பை வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்ட நபரான Hazrul Hisham Ghazali நான்காண்டுகளுக்கு முன்னர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (PKP) அமுலில் இருந்த போது அக்குற்றத்தைப் புரிந்திருக்கிறார்.
சாலைத் தடுப்புச் சோதனையின் போது காரில் இருந்து இறங்கச் சொல்லி போலீஸ் கூடாரத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்ட அவ்விரு மங்கோலியப் பெண்களையும், அந்த இன்ஸ்பெக்டர் அருகிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர்களைத் தனித்தனி அறைகளில் அடைத்து வைத்து, அவர்களின் விருப்பம் இல்லாமல் அவர்களுடன் உடலுறவுக் கொண்டதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
இந்நிலையில் ஒருவருக்கு 460,000 ரிங்கிட்டையும் மற்றொரு பெண்ணுக்கு 360,000 ரிங்கிட்டையும் இழப்பீடாக வழங்குமாறு அவர் உத்தரவிடப்பட்டார்.
அவ்விரு மங்கோலியப் பெண்களையும் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தியது, மானபங்கப்படுத்தியது, கற்பழித்தது என அந்நபர் ஆரம்பத்தில் 11 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.
எனினும் கடந்தாண்டு அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.