பூச்சோங், டிசம்பர்-17 – MLFF எனப்படும் வேகமாகச் செல்லும் பல வழி பாதை முறையிலான டோல் கட்டண வசூலிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்றே கடைசி நாள்; இனியும் பேச்சுவார்த்தைத் தொடராது எனக் கூறி, MLFF திட்டத்தில் பங்கெடுத்துள்ள நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுப் பணித் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் அந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து, MLFF எதிர்காலம் குறித்த அமைச்சரவை அறிக்கை, அடுத்த மாதம் அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படும்.
அதன் போது இறுதி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
MLFF அமுலாக்கத்திற்கு அமைச்சரவை கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
டிசம்பர் 16-குள் பேச்சுவார்த்தை நிறைவடைய வேண்டுமென பொதுப் பணி அமைச்சு தேதி நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த MLFF முறையின் கீழ், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைகளின் அனைத்துப் பாதைகளும் தடையில்லா பாதைகளாக மாற்றப்படும்.
அதாவது, கட்டண வசூலிப்பு சாவடியில் வரிசைக் கட்டி நிற்கத் தேவையின்றி வாகனமோட்டிகள் மின்னியல் கட்டண முறைக்கு மாறி வேகமாகப் பயணத்தைத் தொடரலாம்.