
ஜோர்ஜ் டவுன், செப் 28 – திருடப்பட்ட மற்றும் குளோன் செய்யப்பட்ட வாகனங்களை கருப்புப்பட்டியலில் இடம்பெறச்செய்வதற்கான சட்டப்பூர்வமான எந்த வழிமுறையும் இல்லையென்ற வாதத்தை பினாங்கு உயர் நீதிமன்றம் நிராகரித்ததோடு, Toyota Vellfire MPV வாகன உரிமையாளர் டாக்டர் ஹேமா தியாகு வுக்கு 139,000 ரிங்கிட் இழப்பீடு மற்றும் RM10,000 செலவுத் தொகையை வழங்கும்படி சாலை போக்குவரத்துத்துறைக்கு பினாங்கு உயர்நீதிமன்ற நிதிபதி ஆனந்த் பொன்னுத்துரை உத்தரவிட்டார். அதோடு 2019 ஆம் ஆண்டின் வாகன இயந்திரங்கள் மற்றும் அதன் சாஸ்ஸிஸ் எண்களின் குளறுபடிகளை கண்டறிவதற்கான தரவு தளத்தில் எச்சரிக்கை குறிப்புக்களை அடையாளமிட்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வாதியான டாக்டர் ஹேமா தியாகு பினாங்கு ஜே.பி.ஜே இயக்குனர் மற்றும் கூட்டரசு அரசாங்கத்திற்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் தீர்ப்பு அளித்தபோது நீதிபதி ஆனந்த் பொன்னுதுரை இதனை தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில்ல பயன்படுத்தப்பட்ட Toyota Velfire MPV வாகனத்தை ஹேமா வாங்கியிருந்தார். எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் ஜே.பி.ஜே அந்த வாகனத்தை பறிமுதல் செய்த ஒரு மாதத்திற்குப் பின்னர்தான் அது குளோன் என அவருக்கு தெரியவந்தது . 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 8-ன் கீழ், அனைத்து மாநில ஜேபிஜே இயக்குநர்களும் தங்கள் அதிகார வரம்பில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களின் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும் என்று ஆனந்த் தனது முடிவின் அடிப்படையை எழுத்துப்பூர்வமாக எழுதியுள்ளார். வாகனம் குளோன் செய்யப்பபடுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய தகவலைப் பெற்றவுடன் ஜே.பி.ஜேவின் மாநில இயக்குனரோ அல்லது தலைமை இயக்குனரோ வாகனங்களின் பதிவேட்டை உடனடியாக புதுப்பிக்க உத்தரவிடலாம் என்றும் ஆனந்த் தெரிவித்தார்.