கோலாலம்பூர், செப்டம்பர் -4, MRSM எனப்படும் மாரா அறிவியல் இளநிலை கல்லூரிகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பித்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதே சமயம் SBP எனப்படும் முழு தங்கும் வசதியுடன் கூடிய பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ஆம் தேதியே கடைசி நாள் என நினைவுறுத்தப்படுகிறது.
இவ்வாண்டு கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கும் தேசியப் பள்ளி (SK) மற்றும் தேசிய வகை சீன- தமிழ்ப் பள்ளி மாணவர்களும், இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாம் படிவ மாணவர்களும் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த MRSM மற்றும் SBP கல்வியில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு அரசாங்கம் 10% இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளதால், இந்திய மாணவர்கள் அவ்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
MRSM, SBP பள்ளிகள் மேலும் தரமான கல்வியை வழங்குவதுடன், அங்குப் படிக்கும் மாணவர்களுக்கு தனியாக டியூஷன் எதுவும் போக வேண்டிய அவசியம் இருக்காது.
இத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் நல்ல தேர்ச்சிப் பெற்றால், மேற்படிப்புக்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும்.
எனவே, தொலைவு, உணவு குறித்த ஐயம் போன்ற வீண் கவலையின்றி, தகுதிப் பெற்ற மாணவர்கள் விரைந்து விண்ணப்பித்து விட வேண்டுமென, மலேசிய NGO-கள் கூட்டமைப்பின் தலைவர் குணசேகரன் கந்தசாமி கேட்டுக் கொண்டார்.