
கோலாலம்பூர், மார்ச்-27- “Nasi Lemak”, “Alamak” உட்பட மலேசியா – சிங்கப்பூரிலிருந்து 12 “மொழிபெயர்க்க முடியாத சொற்கள்”, OED எனப்படும் ஆக்ஸ்ஃபர்ட் ஆங்கில அகராதியின் அண்மையப் புதுப்பிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சொற்களுக்கு நேரடி மொழிபெயர்ப்பு இல்லை; ஆனால் மொழியியல் இடைவெளிகளைக் குறைக்க ஆங்கிலம் பேசுபவர்களால் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக, OED இணையத் தளம் தெரிவித்தது.
சில நேரங்களில், அவர்கள் இது போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்; இதனால் கடன் வாங்கிய சொல் இறுதியில் அவர்களின் ஆங்கில மொழி சொற்களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறி விடுவதாக அது மேலும் கூறியது.
மலேசிய – சிங்கப்பூர் மக்களிடையே “Alamak என்ற வார்த்தை, அதிர்ச்சி, திகைப்பு அல்லது சீற்றம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த பயன்படுகிறது.
அதே சமயம், உணவை எடுத்துச் செல்வது அல்லது பொட்டலம் கட்டுவது என்பதைக் குறிக்க, சீனர்கள் மட்டுமின்றி மலேசிய-சிங்கப்பூர் மக்களே பரவலாகப் பயன்படுத்தும் “தாப்பாவ்” என்ற ஒரு cantonese வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மோட்டார் பந்தயங்களில் ஈடுபடுவோரைக் குறிக்கும் “Mat Rempit”-டுக்கும் அகராதியில் இடம் கிடைத்துள்ளது.
மற்றொரு குறிப்பிடத்தக்க வார்த்தை “Terror” ஆகும்; இது ‘மலேசிய ஆங்கிலத்தில்’ சூழலைப் பொறுத்து “பயங்கரமானது, மோசமானது” மற்றும் “போற்றத்தக்கது” அல்லது சிறந்தது” என பொருள்படும்.
ஆக்ஸ்ஃபர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள எஞ்சிய மலேசிய-சிங்கப்பூர் வார்த்தைகள் “kaya”, “kaya toast”, “otak-otak”, “Steamboat”, “fish head curry”, half-boiled egg” ஆகும்.