ஜோகூர் பாரு, ஜனவரி-6, ஜோகூர் பாரு, தாமான் மௌவுன்ட் ஆஸ்டின் பகுதியிலுள்ள கேளிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட Op Noda சோதனையில், 12 தாய்லாந்து பெண்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
22 முதல் 38 வயதிலான அவர்கள், முறையான ஆவணங்கள் எதுவுமின்றி அங்கு உணவு மற்றும் பானங்களை பரிமாறுபவர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.
இதையடுத்து குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு அவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டதாக, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் கூறினார்.
சனிக்கிழமை இரவு சுமார் 6 மணி நேரங்களுக்கு நீடித்த அச்சோதனையில், அம்மையத்தின் நிர்வாகி என நம்பப்படும் 19 வயது உள்ளூர் ஆடவரும் கைதானார்.
அவர் 3 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.
சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தியது, பெர்மிட் இல்லாமல் அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியது, உரிமம் இல்லாமல் கேளிக்கை மையத்தை நடத்தி வந்தது போன்ற குற்றங்கள் தொடர்பிலும் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.