Latestஉலகம்

Open AI முறைகேடுகளை அம்பலப்படுத்திய சுச்சிர் பாலாஜி மர்ம மரணம்; கவனம் ஈர்க்கும் இலோன் மாஸ்க்கின் பதிவு

வாஷிங்டன், டிசம்பர்-15,Open AI அதிநவீனத் தொழில்நுட்பத்தில் இருப்பதாகக் கூறப்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்திய இளம் ஆய்வாளர் சுச்சிர் பாலாஜியின் மர்ம மரணம், தொழில்நுட்ப உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 26 வயது பாலாஜி, நவம்பர் 26-ஆம் தேதி அமெரிக்கா சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் இறந்துகிடந்தார்.

அவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை; அதில் சதிநாச அம்சங்கள் இருப்பதாக இதுவரை ஆதாரங்கள் இல்லையென போலீஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் பாலாஜியின் மரணத்தில் மர்மங்கள் மறைந்துகிடப்பதாக அவரின் குடும்பத்தாரும், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களும் சந்தேகிக்கின்றனர்.

AI தொழில்நுட்பத்தின் அறியாதப் பக்கங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதில் பாலாஜிக்குப் பெரும் பங்கு இருப்பதே அதற்குக் காரணம்.

Open AI-யில் நான்காண்டு காலம் வேலை செய்தவரும், அமெரிக்காவில் AI குறித்து ஆய்வு செய்து வந்தவருமான பாலாஜி, Chat GBT உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

இந்நிலையில், காப்புரிமை மீறல், பயனர்களின் தரவுகள் திருடப்படுவது போன்ற முறைகேடுகள் Open AI-யில் சகஜமாக நடப்பதாகக் கூறி தனது X தளத்தில் பாலாஜி பகிரங்கப்படுத்தியது வைரலானது.

பாலாஜியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் Open AI உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தின.

அவற்றின் நம்பகத்தன்மைக் குறித்து மக்கள் கேள்வியெழுப்ப பாலாஜி முக்கியக் காரணமாக இருந்ததால், பலருக்கு அவர் ‘எதிரியானார்’.

இந்நிலையில் பாலாஜியின் மர்ம மரணம் குறித்த செய்தியை, X தள உரிமையாளரும் உலகக் கோடீஸ்வரருமான இலோன் மாஸ்க்கும் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Open AI-யின் இணை நிறுவனரான இலோன் மாஸ்க், பின்னர் அதிலிருந்து பிரிந்துசென்றது குறிப்பிடத்தக்கது.

பாலாஜியின் மரணத்தில் புதைந்துகிடக்கும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டுமென தொழில்நுட்ப நெறிமுறைகள் மீதான ஆலோசகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொழில்நுட்ப உலகின் முறைகேடுகளை தைரியமாக அம்பலப்படுத்துவோர், பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!