ஜொகூர் பாரு, மே-13, ஜொகூர், Gelang Patah-வில் குடிநுழைவுத் துறை நடத்திய Ops Sapu அதிரடிச் சோதனையில், முறையான பயணப் பத்திரம் வைத்திராத 40 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்.
அவர்களில் 27 பேர் வங்காள தேச ஆடவர்கள், எழுவர் இந்தியப் பிரஜைகள், மூவர் நேப்பாளிகள், இருவர் பாகிஸ்தானியர்கள், ஒருவர் சீன பிரஜை ஆவர்.
மொத்தமாக 246 வெளிநாட்டவர்கள் மீது சோதனைச் செய்யப்பட்டதில்,
19 முதல் 40 வயதிலான அந்த 40 பேரும் கைதானதாக குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
கள்ளக்குடியேறிகளின் நடமாட்டம் குறித்து பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைதான அனைவரும் மேல் விசாரணைக்காக Setia Tropika குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், சுய விருப்பத்தின் பேரில் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் திட்டம் இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி முடிவடைவதற்குள் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தகுதிப் பெற்ற கள்ளக் குடியேறிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.