Pinkfish கலைநிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட இருவர் சீராக இருப்பதால் விரைவில் போலீசார் வாக்குமூலம் பெறுவர்
சுபாங் ஜெயா, ஜன 8 – பண்டார் சன்வேயில் புத்தாண்டை வரவேற்கும் இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் , போதைப் பொருள் பயன்படுத்திய சந்தேகத்தினால் சிகிச்சைக்கு உள்ளான இருவர் சுயநினைவுக்கு திரும்பியதால் அவர்களிடம் போலிசார் விரைவில் வாக்குமூலம் பதிவு செய்வார்கள் . தற்போது அவ்விருவரின் நிலை சீராக இருப்பதோடு அவர்கள் தொடர்ந்து மலாயா பல்கலைககக் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருவார்கள் என சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார். இப்போதைக்கு போலீசார் அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை.
விசாரணைக்கு உதவும் பொருட்டு கலைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட இதுவரை 49 தனிப்பட்ட நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வான் அஸ்லான் கூறினார். விசாரணை முடிந்ததும் அது தொடர்பான ஆவணங்கள் அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞருக்கு அனுப்பிவைக்கப்படும் . டிசம்பர் 31ஆம்தேதி புத்தாண்டுக்கு முன்னதாக நடைபெற்ற Pinkfish கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் நால்வர் மரணம் அடைந்ததோடு மூவர் காயம் அடைந்ததாக இதற்கு முன் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் தெரிவித்திருந்தார். இறந்த நால்வரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் மற்றும் இதர மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் அவர்கள் அனைவரும் எக்ஸ்டசி (ekstasi ) போதை மாத்திரைகளை உட்கொண்டதாக நம்படுகிறது.