கோத்தா திங்கி, டிசம்பர்-16 – ஜனவரியில் தொடங்கும் PLKN 3.0 தேசிய சேவைப் பயற்சிக்கான அலவன்ஸ் தொகை, 8 ரிங்கிட்டாகவே நிலை நிறுத்தப்படுகிறது.
அதனை உயர்த்த வேண்டிய அவசியம் எதுவும் தற்போதைக்கு ஏற்படவில்லையென, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் (Datuk Seri Mohamed Khaled Nordin) தெரிவித்தார்.
பாதுகாப்பு மீதான சிறப்பு நாடாளுமன்றத் தேர்வுக் குழு, PLKN 3.0 பங்கேற்பாளர்களுக்கான தினசரி அலவன்ஸ் தொகை 50 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டுமென வியாழக்கிழமை பரிந்துரை செய்திருந்தது.
அது குறித்து பேசிய போது அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில் இராணுவ முகாம்களில் PLKN பங்கேற்பாளர்கள் மத்தியில் பகடிவதை பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்றார் அவர்.
பயிற்சிக் காலம் வெறும் 45 நாட்கள் மட்டுமே என்பதால், பகடிவதை போன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியுமென டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் கூறினார்.
PLKN 3.0 அமுலாக்கத்தை சோதனை செய்து பார்க்கும் வகையில், ஜனவரி 12 தொடங்கி 2 வாரங்களுக்கு 200 ஆண்கள் தன்னார்வ முறையில் பயிற்சியில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.