சுங்கை பூலோ, ஏப்ரல்-19, சிலாங்கூர் Puncak Alam-மில் மர்ம கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பல மணி நேரங்கள் அடைத்து வைக்கப்பட்ட கடன் ஆலோசகர் ஒருவரை போலீஸ் பாதுகாப்பாக மீட்டிருக்கிறது.
கடத்தப்பட்டவரின் முதலாளி செவ்வாய்க்கிழமை இரவு செய்தப் புகாரைத் தொடர்ந்து போலீஸ் நடவடிக்கையில் இறங்கியது.
நிறுவனத்தின் கடன் விவகாரம் தொடர்பில் ஒரு பெண்ணைச் சந்திக்கச் சென்ற போது 20 வயது அந்நபரை அங்கிருந்த கும்பல் தாக்கி, கட்டிப் போட்டு கடத்திச் சென்றிருக்கிறது; அவரிடம் இருந்த இரண்டாயிரம் ரிங்கிட் ரொக்கத்தையும் அக்கும்பல் பறித்துக் கொண்டது.
பின்னர், புகார்தாரரான முதலாளியைத் தொடர்புக் கொண்ட அக்கும்பல், ஏழாயிரம் ரிங்கிட் பிணைப்பணம் கொடுத்தால் மட்டுமே கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்படுவார் என மிரட்டியுள்ளது.
புகார்தாரர் கொடுத்த விவரங்கள் அடிப்படையில் துப்புத் துலக்கிய சுங்கை பூலோ போலீஸ், Puncak Alam சுற்று வட்டாரங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டு புதன்கிழமை அதிகாலை கடத்தல் கும்பலைச் சுற்றி வளைத்தது.
அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த நபரை மீட்ட போலீஸ், கடத்தியவர்கள் என நம்பப்படும் 30 முதல் 40 வயது வரையிலான 3 உள்ளூர் ஆடவர்களைக் கைதுச் செய்தது.
அக்கும்பலிடம் இருந்து Honda கார், கைப்பேசிகள் ATM அட்டைகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அக்கும்பல், போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் ஏற்கனவே 4 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைதான மூவரும் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.