கோலாலம்பூர், ஏப்ரல் 19 – QR குறியீடுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் புதிய அணுகுமுறையை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குறிப்பாக, தண்ணீர் போத்தல்களில் இருக்கும் QR குறியீடுகளை “ஸ்கென்” செய்வதன் வாயிலாக, ரொக்க பற்றுசீட்டுகளை வெல்ல முடியும் என கூறி மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த புதிய மோசடி குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு போலீஸ் எச்சரித்துள்ளது.
அண்மைய சில காலமாக, அந்த மோசடி நடவடிக்கை தொடர்பான புதிய யுக்திகள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவியுள்ளன.
குறிப்பாக, அக்கும்பலை சேர்ந்தவர்கள், வீடு வீடாக சென்று பரிசுகளை விநியோகம் செய்து வருவது தெரிய வந்துள்ளதாக, CCID எனப்படும் மத்திய வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் Datuk Seri Ramli Mohamed Yoosuf தெரிவித்தார்.
அவ்வாறு விநியோகிக்கப்படும் பரிசுப் பொருட்களில் காணப்படும் QR குறியீடுகளை ஸ்கென் செய்தால், 200 ரிங்கிட் பெருமானமுள்ள பற்றுசீட்டுகளை பொதுமக்கள் பெறலாம் என கூறப்படுகிறது.
எனினும், அப்படி scan செய்வதனால், பொதுமக்கள் தங்களையும் அறியாமல் கைபேசியிலுள்ள, சுய வங்கி விவரங்களையும் பகிர்கின்றனர். அதனால், அவர்கள் தங்கள் வங்கி வைப்பில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடலாம் என Ramli எச்சரித்தார்.
அதனால், வெறுமனே QR குறியீடுகளை scan செய்வதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
QR குறியீடுகளை கொண்டு மேற்கொள்ளப்படும் மோசடி தொடர்பில், இதுவரை போலீஸ் எந்த ஒரு புகாரையும் பெறவில்லை என்றாலும், இதனை ஒரு முன்னெச்சரிக்கையாக கொள்ளுமாறு Ramli பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
QR குறியீடுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி, ஒருவரின் தனிப்பட்ட தரவுகளை மையமாக கொண்டது என்பதால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதையும் Ramli சுட்டிக்காட்டியுள்ளார்.