
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 8 – 15 லட்சம் ரிங்கிட்டுக்கும் கூடுதல் மதிப்புடைய, பதிவுச் செய்யப்படாத மருந்துகளை, சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததை தொடர்ந்து, வெளிநாட்டிலிருந்து வரும் பதிவுச் செய்யப்படாத மருந்துகளை மீண்டும் பொட்டலம் இடும் மோசடி கும்பல் ஒன்றின் நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளன.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சிலாங்கூர் மாநில மருந்தக அமலாக்க பிரிவு அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து, பதிவுச் செய்யப்படாத மருந்துகளை சேமித்து வைத்து விநியோகம் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று இடங்களில் அண்மையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் பதிவுச் செய்யப்படாத மருந்துகளை, பிரபல முத்திரை மருந்துகளை போல பொட்டலம் செய்து, உள்நாட்டு சந்தையில் அக்கும்பல் விற்று வந்தது தெரிய வந்துள்ளது.
சீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் இன்சுலின், இதய சிகிச்சை மருந்துகள், கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள், ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், கண் சொட்டு மருந்துகள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
1952-ஆம் ஆண்டு, போதைப் பொருள் விற்பனை சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படும் வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50 ஆயிரம் ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.