கோலாலம்பூர், அக்டோபர்-1 – நாட்டில் 30 வயதுக்குக் கீழ்பட்ட 53,000 இளையோர் பெரும் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் மொத்தக் கடன் மட்டுமே 190 கோடி ரிங்கிட்டாகும்.
AKPK எனப்படும் கடன் நிர்வகிப்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் (Datuk Seri Amir Hamzah Azizan) அவ்வாறு கூறினார்.
வேலை செய்யும் மலேசியர்களில் 28 விழுக்காட்டினர், தங்களின் அன்றாடத் தேவைக்கான அத்தியாசியப் பொருட்களை வாங்குவதற்குக் கூட மற்றவரிடம் கடன் வாங்குவது கண்டறியப்பட்டுள்ளது.
தேவைக்கும் மேற்பட்டு கண்டபடி செலவு செய்வது, அதனால் பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை அறியாமலிருப்பது போன்றவை, மலேசிய இளையோர் பெரும் கடன் தொல்லையில் சிக்கிக் கொள்வதற்குக் காரணமாக உள்ளது.
கடன்களை நிர்வகிப்பதில் மெத்தனம் காட்டுவது; அல்லது ஏனோ தானோ போக்கிலிருப்பதும் அவர்களைப் பிரச்னையில் சிக்க வைத்து விடுகிறது.
2024 நிதி விழிப்புணர்வு மாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் அவ்வாறு சொன்னார்.