கோலாலம்பூர், ஜூன் 14 – PPR மக்கள் வீடமைப்புப் பகுதியில் வசிப்பவர் என நம்பப்படும் பெண் ஒருவர், நிலுவையில் இருக்கும் தனது வீட்டு வாடகை பிரச்சனைக்கு தீர்வுக் காண வந்த அதிகாரிகளிடம், கத்தி வாக்குவாததில் ஈடுபடும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளதை அடுத்து, அதில் இடம்பெற்றுள்ள பெண், இணையவாசிகளின் கடும் விமர்சனங்களுக்கு இலக்காகியுள்ளார்.
கடந்த புதன்கிழமை, @localrkyt எனும் X சமூக ஊடக கணக்கில் அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த காணோளியில், தனது வீட்டிற்கு வரும் அதிகாரிகளிடம், பெண் ஒருவர் கத்தி கூச்சலிடுகிறார்.
வெளிநாட்டவர்கள் அனுமதியின்றி வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில், தனக்கு ஏன் உதவு எதுவும் வழங்கப்படவில்லை என அந்த பெண் புலம்புகிறார்.
அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகளில் ஒருவர், “நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக வந்துள்ளோம். நீங்கள் வெறும் 124 ரிங்கிட் குறைந்த வாடகையை தான் செலுத்துகிறீர்கள்” என அப்பெண்ணை சமாதானம் செய்ய முயலுகிறார்.
எனினும், அச்சம்பவம் எப்பொழுது, எங்கு நிகழ்ந்தது என்ற விவரம் எதுவும் அந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை.
இவ்வேளையில், அந்த காணொளியின் கீழ், இணையப் பயனர்கள் பலர் கடும் கண்டனத்தையும், எதிர்மறையான விமர்சனங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
“பலர் வசிக்க வீடின்றி அவல நிலையில் இருக்கின்றனர். உங்களால் வெறும் 124 ரிங்கிட்டை செலுத்த முடியாதா?” என அதில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ள வேளை ;
“உண்மையில் அந்த வீட்டின் வாடகை 124 ரிங்கிட் தானா? வீட்டை பார்த்தால் அப்படி தெரியவில்லை. நல்ல முறையில் பேசும் அதிகாரியிடம் கத்தி கூச்சலிடும் அவசியம் என்ன வந்தது?” என மற்றொருவர் சாடியுள்ளார்.