
கோலாலம்பூர், மார்ச் 15 – பள்ளிக் கூடம் தொடங்குவதற்கு முன்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் 150 ரிங்கிட் உதவித் தொகையை , மாணவர்களின் வங்கி கணக்கிலே நேரடியாக சேர்க்கும் பரிந்துரையை அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
அதன் வாயிலாக, இவ்வாண்டு ஜனவரியில் வங்கியிலிருந்து தலைமையாசிரியர் ஒருவர் ஒரு லட்சம் ரிங்கிட் உதவித் தொகையை எடுத்தபோது, அப்பணம் திருடுபோன சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை தடுக்க முடியுமென , கல்வி துணையமைச்சர் Lim Hui Ying தெரிவித்தார்.
முன்னதாக , கோவிட் கால கட்டத்தில் அந்த உதவித் தொகை பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கிலே நேரடியாக செலுத்தப்பட்டு வந்ததை , முன்னாள் கல்வி அமைச்சரான ரட்சி ஜிடின் ( Radzi Jidin) மக்களவையின் போது சுட்டிக் காட்டினார்.
அதையடுத்து அந்த நடைமுறையை மீண்டும் முழுமையாக அமலுக்கு கொண்டு வர எவ்வளவு நாட்கள், அமைச்சு எடுத்துக் கொள்ளுமென அவர் வினவினார்.
அதற்கு உரிய கால அவகாசத்தை தம்மால் வழங்க இயலாது என கூறிய துணையமைச்சர், தற்போது 12 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கு பெற்றோருடன் இணைந்து திறக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் அந்த உதவித் தொகை சேர்க்கப்பட்டு வருவதாக கூறினார்.